இலங்கையில் தமிழ் எம்.பி. சுட்டுக்கொலை இலங்கையில் தமிழ் எம்.பி. தியாகராஜ மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டின் கொட்டாஞ்சேனையில் உள்ள சிவன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற போது மர்ம நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எவரெஸ்ட் சாதனையாளர் எட்மண்ட் ஹில்லாரி மறைந்தார் இமாலய சோகம் என்று குறிப்பிடலாம். உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்டில் முதன் முதலில் கால்பதித்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி 88வது வயதில் மறைந்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக உதவிய டென்சிங் நோர்கேயின் இன (ஷெர்பா) மக்களுக்காக இன மக்களுக்கு எட்மண்ட் ஹில்லாரி சேவையாற்றினார்.
மலேசியாவில் தமிழ எம்.பி. கொலை மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கிருஷ்ணசாமி, அவரது கட்சி அலுவலகத்தில் மர்ம மனிதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கருப்பினத்தவரை அதிபராக ஏற்க முடியாது நியூயார்க் டைம்ஸ் சார்பில் தொலைபேசி வாக்கெடுப்பில் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு கருப்பினத்தவர் தேர்வு செய்யப்படுவதை அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அமெரிக்க வாழ் ஆப்ரிக்கர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக செய்தி வெளியானது ஒபாமாவுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது.
சுகர்த்தோ மறைந்தார்! இந்தோனேஷியாவின் கம்யூனிச ஆட்சியை அகற்றிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ தனது 86வது வயதில் மரணமடைந்தார். சுமார் 32 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர் கடந்த 1998இல் பதவி விலகினார்.
பிப்ரவரி
பெனாசிர் கொலையில் உண்மை வெளியீடு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை, தற்கொலைத் தாக்குதலின் விளைவாகத்தான் இறந்துள்ளார் என ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகளின் விசாரணை அறிக்கை வெளியிட்டனர்.
ஹிண்ட்ராப் பேரணி ஒடுக்கப்பட்டது மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹின்ட்ராஃப் அமைப்பினர் நடத்திய பேரணியை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. இதற்கு சர்வதேச நாடுகளில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது.
ஓய்வு பெற்றார் காஸ்ட்ரோ கியூபாவில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி கடந்த 49 ஆண்டுகளாக அதிபர் பதவியை வகித்து வந்த ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஓய்வை உலகிற்கு அறிவித்தார். அமெரிக்காவின் 9 அதிபர்களால் சாதிக்க முடியாத விஷயத்தை காஸ்ட்ரோவின் உடல்நிலை சாதித்தது.
ரவுல் காஸ்ட்ரோ கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் வகித்த அதிபர் பதவியை அவரது தம்பியான அதிபராக ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக் கொண்டார்.
மார்ச்
படாவி 2வது முறையாக பிரதமர் மலேசிய மன்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டின் புதிய பிரதமராக அப்துல்லா அகமது படாவி பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்பது இது 2வது முறையாகும்.
இத்தாலியில் மகாத்மா சிலை மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை இத்தாலியின் 'பார்கோ விர்ஜிலியானா' பகுதியில் திறக்கப்பட்டது. அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ராஜிவ் டோக்ரா, நேப்ல்ஸ் நகரத் தலைவர் ரோசா இர்வோலினோ ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர்.
பாகிஸ்தான் பிரதமராக கிலானி தேர்வு பாகிஸ்தானின் புதிய பிரமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுப் ரஸா கிலானி தேர்வு செய்யப்பட்டார். அதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அவர் 264 வாக்குகளை பெற்றார்.
ஏப்ரல்
பிரிட்டனுக்கு சென்றது ஸ்கார்லெட் உடல் கோவாவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பிரிட்டன் இளம்பெண் ஸ்கார்லெட் கீலிங்கின் உடல் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது கொலை இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் ஓசைக்கு தடை மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வாசிக்கும் தமிழ் நாளிதழான ‘மக்கள் ஓசை’க்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
மே
ரஷ்ய அதிபராக மெட்விடேவ் பதவியேற்பு ரஷ்யாவின் புதிய அதிபராக டிமிட்ரி மெட்வெடேவ் பதவியேற்றார். இவர் முன்னாள் அதிபர் விளாடிமிர் புடினின் ஆதாரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் புயலில் லட்சக்கணக்கானோர் பலி மியான்மரில் அடித்த நர்கீஸ் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால் இப்புயலுக்கு 1,28,000 மக்கள் பலியாகி இருக்கலாம் என மே 15இல் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.
எவரெஸ்டில் ஒலிம்பிக் சுடர் பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான சுடர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தது வரலாற்றுச் சாதனை படைத்தது. 19 உறுப்பினர் கொண்ட சீனக் குழு ஒலிம்பிக் சுடரை எவரெஸ்டிற்கு கொண்டு சேர்த்ததை உலகமே தொலைக்காட்சி செய்திகளில் அண்ணாந்து பார்த்தது.
சீனாவில் பயங்கர நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் 900 பேர் உள்பட 5,000 பேர் பலியாகியிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. முடிவில் ==
நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவு நேபாளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாவோயிஸ்ட் கட்சியின் முதல் கூட்டம் தலைநகர் காத்மண்டுவில் கூடி, மன்னராட்சியை அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஜுன்
அதிபர் வேட்பாளரானார் ஒபாமா அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கருப்பினத்தவரான பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டார்.
ஜுலை
மரணப் படுக்கையில் பின்லேடன்? அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.-யைச் சேர்ந்த 2 அதிகாரிகள் அல்கய்டா அமைப்பின் தலைவர் பின்லேடன் சிறுநீரக நோயால் அவதியுற்று வருவதாகவும், இன்னும் சில மாதங்களே அவர் உயிருடன் இருப்பார் என்றும் கூறினர்.
சுனிதா வில்லியம்சிற்கு பத்ம பூஷன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் சாதனைகளுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
பிரபஞ்ச அழகியானார் மென்டோசா வியட்நாம் நாட்டில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் வெனிசுலா அழகி டயானா மென்டோசா அழகிப் பட்டம் வென்றார்.
மண்டேலாவுக்கு மகாத்மா விருது தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு, மகாத்மா காந்தி சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டது.
ஹனீஃப் மீது குற்றமில்லை ஆஸ்ட்ரேலியாவிற்கு இந்தியரான முகமது ஹனீஃப் எந்த அச்சுறுத்தலையும் தரவில்லை, அவர் மீது தவறாக குற்றச்சாற்றுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய உளவு நிறுவனம் கூறியது.
ஆகஸ்ட்
நேபாளப் பிரதமரானார் பிரச்சண்டா மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய நேபாளத்தின் முதல் பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பதவியேற்றுக் கொண்டார்.
பதவி விலகினார் முஷாரஃப் ராணுவப் புரட்சியின் மூலம் பாகிஸ்தான் ஆட்சியை பிடித்த முஷாரஃப், அந்நாட்டு ஜனநாயக அரசு, எதிர்க்கட்சிகளின் நெருக்குதலால் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
செப்டம்பர்
பதவி விலகினார் புகுடா உலகின் 2வது பெரிய பொருளாதாரம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து நலிவடைந்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து யசுவோ புகுடா விலகினார்.
இந்தியாவிற்கு என்.எஸ்.ஜி. விலக்கு இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக அணு சக்தி தொழில்நுட்ப வணிக நாடுகளிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் விலக்கை அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு அளித்துள்ளது.
பிக்-பேங்-முதற்கட்டம் வெற்றி உலகம் தோன்றியது எப்படி என்பதைக் கண்டறிவதற்காக 80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜெனீவாவில் நடத்தப்பட்ட சோதனையின் முதற்கட்டம் வெற்றி பெற்றது.
தாய்லாந்து பிரதமராக சோம்சாய் தேர்வு தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அந்நாட்டின் புதிய பிரதமராக சோம்சாய் வோங்சாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் தாக்-ஷின் ஷினாவத்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நட்சத்திர விடுதி மீது தாக்குதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள 'மேரியாட்' நட்சத்திர விடுதியின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அயல்நாட்டினர் உட்பட 60 பேர் உடல் சிதறி பலியாகினர்.
பிக்-பேங்-2009இல் தொடரும் 'பிக்-பேங்' சோதனை சாலையில் ஹீலியம் வாயுகசிந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட ஆய்வுகள் 2009 வசந்த காலத்தில் நடத்தப்படும் என அணுசக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு தெரிவித்தது.
பிரான்சுடன் அணு சக்தி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையில் அணு எரிபொருள், அணு உலைகள் வழங்கலை உள்ளடக்கிய சமூகப் பயன்பாட்டு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அக்டோபர்
123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.
எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்புக்கு நோபல் ஹெச்.ஐ.வி. வைரஸைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியருக்கும், கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமான வைரஸைக் கண்டுபிடித்த ஜெர்மன் விஞ்ஞானி ஹரால்ட் ஜுர் ஹவ்சனுக்கும் 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிரான்ஸ் எழுத்தாளருக்கு நோபல் இலக்கியத்திற்கான 2008 நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-மேரி குஸ்தாவே-லி க்ளேஸியோ-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
123 ஒப்பந்த வரைவில் புஷ் கையெழுத்து இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வகைசெய்யும் 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை சட்டமாக்கிடும் வரைவில் அதிபர் புஷ் கையெழுத்திட்டார்.
அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்து இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தில், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைசும் கையெழுத்திட்டுள்ளனர்.
அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டம் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி அல்போன்ஸாவுக்கு போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் இன்று புனிதர் பட்டம் வழங்கினார்.
ஹிண்ட்ராஃப் அமைப்புக்கு தடை இந்து உரிமை நடவடிக்கை சங்கத்தின் (ஹிண்ட்ராஃப்) நடவடிக்கைகள் மலேசியாவின் பாதுகாப்புக்கும், நாட்டின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளதால் அந்த அமைப்புக்கு தடைவிதிப்பதாக மலேசிய அரசு அறிவித்தது.
சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சீன அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால், அந்நாட்டின் பிறப்பு விகிதம் 5.8% இருந்து 1.8% ஆக சரிந்துள்ளது.
ஒபாமாவை கொல்ல சதி இனவெறி காரணமாக, அமெரிக்க அதிபர் பதவிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவை கொலை செய்ய தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டது.
நவம்பர்
அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் 364 எலக்டோரல் வாக்குகள் பெற்று வரலாற்றுச் சாதனை வெற்றியைப் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா நிகழ்த்தினார்.
மதம் மாறினார் மைக்கேல் ஜாக்சன் உலகப் புகழ்பெற்ற பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாமியராக மதம் மாறியுள்ளார். மேலும் தனது பெயரை ‘மிக்காயில்’ என்றும் மாற்றிக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் யோகாவுக்கு தடை இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட யோகா பயிற்சியை மேற்கொள்வது, முஸ்லிம் மதத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை அழித்துவிடும் என்பதால் மலேசியாவில் உள்ள தேசிய ஃபட்வா கூட்டமைப்பு யோகா பயிற்சிக்கு தடைவிதித்தது.
டிசம்பர்
நைஜீரியா கலவரம்-400 பேர் பலி நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நகரில் ஏற்பட்ட மதக்கலவரங்களுக்கு குறைந்தது 400 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரோமில் நெருக்கடி நிலை பிரகடனம் இத்தாலியில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக தைபர் நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ரோம் நகரில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
உலக அழகி சென்யா ரஷ்யாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா 2008ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சார்பில் போட்டியில் கலந்து கொண்ட பார்வதி ஓமன குட்டன் 2-ம் இடம் பிடித்தார்.
புஷ் மீது ‘ஷூ’ வீச்சு அமெரிக்காவின் அதிபராக ஈராக்கிற்கு கடைசி அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அதிபர் புஷ் மீது, தனது காலில் அணிந்திருந்த ‘ஷூ’க்களை சுழற்றி வீசியதன் மூலம் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தொலைக்காட்சி செய்தியாளர் அல்-சைதி தன்பக்கம் ஈர்த்தார்.