ரஷ்யாவின் சென்யா உலக அழகி!
, ஞாயிறு, 14 டிசம்பர் 2008 (18:12 IST)
ரஷ்யாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா 2008ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சார்பில் போட்டியில் கலந்து கொண்ட பார்வதி ஓமன குட்டன் 2-ம் இடம் பிடித்தார்.
58-
வது உலக அழகி போட்டி தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனகுட்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.இதன் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற 5 அழகிகளில், இந்திய அழகி பார்வதியும் இடம் பெற்று இருந்தார்.இப்போட்டியில், ரஷ்யாவின் சென்யா சுகிநோவா உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக போட்டியின் தேர்வுக்குழு தலைவரான ஜுலியா மொர்லி அறிவித்தார். இந்தியாவின் பார்வதி ஓமன குட்டன் (வயது 21) 2-வது இடத்தையும், டிரினிடாட் டொபாகா நாட்டைச் சேர்ந்த கேபிரியல் வால்காட் 3-வது இடத்தையும் பிடித்தனர்.இதனைத் தொடர்ந்து சென்யாவுக்கு உலக அழகி கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் நடந்த உலக அழகி போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த ரீட்டா ஃபாரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோர் உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.நூலிலையில் உலக அழகி வாய்ப்பைத் தவற விட்ட பார்வதி, 'மிஸ் மலையாளி 2005', 'மலையாளி மங்கா 2005', 'கடற்படை ராணி' - கொச்சி (2006), 'கடற்படை ராணி' -விசாகப்பட்டினம் (2007) போன்ற பல்வேறு அழகி பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.