இந்தியா- பிரான்ஸ் இடையில் அணு எரிபொருள், அணு உலைகள் வழங்கலை உள்ளடக்கிய சமூகப் பயன்பாட்டு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் விலக்குடன் கூடிய அனுமதி கிடைத்த பிறகு இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிசில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, நமது பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முன்னிலையில் நமது அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர், பிரான்ஸ் நாட்டு அயலுறவு அமைச்சர் பெர்னார்ட் கெளச்னர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், "மற்ற ஐரோப்பிய நாடுகளுடனும் இதுபோன்ற ஒப்பந்தங்களை விரைவில் இறுதி செய்வோம்." என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பிரான்சுடன் கையெழுத்திடப்பட்டுள்ள சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில், அணு எரிபொருள், அணு உலைகள் வர்த்தகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இருதரப்பு உறவுகளில் புதிய துவக்கத்தை உருவாக்கியுள்ள இந்த ஒப்பந்தமானது, அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் கடந்த 34 ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா அதிலிருந்து வெளிவந்து சிறப்பான வளர்ச்சியைப் பெறுவதற்கான முதல் உறுதியான நடவடிக்கை ஆகும் என்று இருதரப்பும் கூறியுள்ளன.
அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் அணு சக்தி வர்த்தகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்திற்கு செப்டம்பர் 6 இல் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்கக் காங்கிரசின் ஒப்புதலிற்குக் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.