நேபாளத்தின் டென்சிங் நோர்கேயுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட்டை முதன்முதலில் எட்டியவரான சர் எட்மண்ட் ஹில்லாரி மறைந்தார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவினால் அவர் இறந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது மரணச் செய்தியை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க், சாதாரணமாக பிறந்து உலக சாதனையை எட்டியவர் எட்மண்ட் என்று புகழஞ்சலி செலுத்தினார்.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த குணங்களுடன் நியூசிலாந்திற்கே பெருமை சேர்த்தவர் என்றும், திட்டமிட்ட வாழ்க்கையுடன், அடக்கம், பெருந்தன்மையுடன் வாழ்ந்தவர் எட்மண்ட் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
நியூசிலாந்தைச் சேர்ந்தவரான எட்மண்ட் ஹில்லாரி தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே மலையேறுவதில் அளவற்ற ஆர்வம் உள்ளவராகத் திகழ்ந்தார். முதன்முதலில் 1935 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு அருகில் உள்ள மலை உச்சியை அடைந்தார்.
இதையடுத்து, நியூசிலாந்தில் உள்ள மலைகளிலும், பின்னர் ஆல்ப்ஸ் மலைகளிலும், இறுதியாக இமய மலையிலும் ஏறினார். எட்மண்ட் ஹில்லாரி இதுவரை 20,000 க்கும் அதிகமான உயரமுள்ள 11 மலைச் சிகரங்களை எட்டிச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 1953 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி கடல் மட்டத்தில் இருந்து 29,028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கேயுடன் இணைந்து எட்டினார். உச்சியில் சுமார் 15 நிமிடங்கள் நின்றிருந்த இருவரும் ஒருவரையொருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, இவருடைய மலை ஏற்றக் குழுவில் இருந்த 2 பேர் உடல் நலக்குறைவினால் திரும்பி விட்டனர்.
தனது இறுதி காலத்தில் நேபாளத்தில் உள்ள மக்களுக்கு சேவையாற்றி வந்த எட்மண்ட் ஹில்லாரி, நிமோனியாவினால் பாதிக்கப்பட்டார்.