நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாவோயிஸ்ட் கட்சியின் முதல் கூட்டம் தலைநகர் காத்மண்டுவில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் மன்னராட்சியை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கடந்த 239 ஆண்டுகளாக மன்னராட்சியின் கீழ் இருந்து வந்த நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டில் நடத்தப்பட்ட அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய மாவோயிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது. மன்னராட்சியை ஆதரிக்கும் ஒரு வேட்பாளர் கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட சிறப்பு நாடாளுமன்றம், மன்னராட்சிக்கு முடிவுகட்டுவதற்கான தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்துகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை நிகழ்த்த உள்ள இந்த வாக்கெடுப்பில், மன்னராட்சி ஒழிக்கப்படுவது உறுதி என மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரச்சன்டா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநிமிடமே மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அரசு அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் என்றும் கூறியுள்ளார்.
மன்னராட்சி ஒழிக்கப்படுவதையொட்டி நேபாள நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.