கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி அல்போன்ஸாவுக்கு போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் இன்று புனிதர் பட்டம் வழங்கினார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் நகரில் மதியம் 1.30 மணிக்கு நடந்த விழாவில் போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டத்தை வழங்கினார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் புனிதர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை அல்போன்ஸா பெற்றுள்ளார்.
இவ்விழாவில் கேரளாவைச் சேர்ந்த 10,000 கிறிஸ்தவர்களும், உலகெங்கிலும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர்.
அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கிய நேரத்தில் உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிறார்த்தனை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குடமாளூர் கிராமத்தில் கடந்த 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி பிறந்தவர் அல்பான்ஸா. சிறுவயது முதலே இறை ஊழியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் துறவறம் பூண்டார்.
ஏராளமான நோய்களால் அவதிப்பட்ட போதும் இறைப்பணியில் இருந்து பின்வாங்காத இவர் கடந்த 1946ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி மறைந்தார். இவருடைய கல்லறை அமைக்கப்பட்டுள்ள பரணங்கானம் என்ற இடத்தில் அவருக்கு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு சென்று பிரார்த்தனை செய்தால் வேண்டிய வரம் கிடைப்பதாக கிறிஸ்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்.
இதனால் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. அதன்படி வாடிகன் நகரில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடந்த விழாவில் போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் புனிதர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை அல்போன்ஸா பெற்றார்.