இந்தோ- அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சிற்கு, அவரின் விண்வெளி சாதனைகளுக்காக நமது நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டனில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்திய வம்சா வழியினரும் பங்கேற்ற விழாவில் சுனிதாவிற்கு இந்தியத் தூதரக அதிகாரி எஸ்.எம்.கவாய் பத்ப பூசன் விருதை இந்திய அரசின் சார்பில் வழங்கினார்.
விருதிற்கு நன்றி தெரிவித்துப் பேசிய சுனிதா, "இந்த பெருமைக்குரிய விருது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
விண்வெளியில் தங்கியிருந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு பூமி மிகவும் அழகாக இருந்தது. பூமியில் எந்த எல்லைகளும் இல்லை.
ஆண், பெண், வேறுபட்ட மதம் அல்லது வேறுபட்ட நிறமுடைய தோலை உடையவர்கள் என்ற அடிப்படையில் நமக்குள் பிரிவினைகள் உள்ளதாக சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். இந்தப் பிரிவினைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் உள்ளனவே தவிர, அவை உண்மையல்ல.
எல்லைகள் இல்லாத உலகத்தை நான் விண்வெளிக்குச் சென்ற பிறகுதான் கண்டேன். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் விண்வெளிக்குச் செல்லாமலே உணர்ந்திருந்தனர்." என்றார்.
இந்த ஆண்டு துவக்கத்திலேயே சுனிதா வில்லியம்சிற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது பணியின் காரணமாக டெல்லிக்கு வந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கரங்களில் விருதினைப் பெற இயலவில்லை.