கம்யூனிஸ்ட் நாடான கியூபாவின் புதிய அதிபராக ரவுல் காஸ்ட்ரோ பதவியேற்றார். புதிய அதிபராக பதவியேற்றுள்ள அவருக்கு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
76 வயதாகும் ரவுல் காஸ்ட்ரோ கடந்த 50 ஆண்டுகளாக கியூபாவின் அதிபராக பதவி வகித்து வந்த பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ஆவார்.
81 வயதாகும் பிடல் காஸ்ட்ரோ கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவின் காரணமாக தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாத நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, கியூபாவின் அடுத்த அதிபராக அவரது சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ நேற்று பதவியேற்று கொண்டார். அப்போது அவர் கியூபாவை கம்யூனிச பாதையில் தொடர உறுதி எடுத்து கொண்டார்.
கியூபா அதிபராக பதவி வகித்து வந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2006ம் ஆண்டு ஜுலை மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அன்று முதல் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.