இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது. செனட் உறுப்பினர்கள் இருவர் பரிந்துரைத்திருந்த இரண்டு திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தினால் ஒத்துழைப்பு முறித்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் அளித்துள்ள உறுதியின் அடிப்படையிலேயே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தம் அமெரிக்க செனட் சபையில் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) வாக்கெடுப்பிற்கு வந்தபோது, அதற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
இந்தியாவை வலுவாக ஆதரிக்கக் கூடிய, ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 123 ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், தற்போது அதிபர் ஜார்ஜ் புஷ் மட்டுமே ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.
அக்டோபர் 4இல் ஒப்பந்தம் கையெழுத்து!
123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் இரண்டு சபைகளும் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திற்குத் தயாராகிவிட்டது.
வருகிற சனிக்கிழமை (அக்டோபர் 4) அன்று இந்தியா வரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் தலைநகர் டெல்லியில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கிறார்.
அனேகமாக அன்று அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதச் சோதனை நடத்தினால்...
இதற்கிடையில், செனட் பெரும்பான்மை தலைவர் ஹாரி ரீட்-க்கு நேற்று காண்டலிசா ரைஸ் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா அணு ஆயுதச் சோதனையை நடத்தினால் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக்கொள்ளுதல் என்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதத்திற்குப் பிறகுதான் 123 ஒப்பந்தத்திற்குச் செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, செனட் சபை உறுப்பினர்களான பைரன் டோர்கன், ஜெஃப் பிங்காமென் (இருவரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்) முன்வைத்துள்ள திருத்தத்தில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா வழங்கும் அணு பொருட்கள், தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியா தனது அணு ஆயுதத் திறனை மேம்படுத்திக் கொள்ளாது என உறுதியளிக்கக் கோரியுள்ளனர்.
இதில் உறுப்பினர் டோர்கன் முன்வைத்துள்ள திருத்தத்தில், சட்டத்தில் இடமில்லை என்றாலும் இந்தியா அணு ஆயுதம் அல்லது அணு ஏவுகணை சோதனை நடத்தினால், அந்நாட்டுக்கு அளித்து வரும் அணு ஆயுத எரிபொருள் ஏற்றுமதி, தொழில்நுட்ப மற்றும் அதுதொடர்பான உபகரணங்களை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மற்றொரு உறுப்பினர் பிங்காமென் வலியுறுத்தியுள்ள திருத்தத்தில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர், ஒருவேளை இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தொழில்நுட்பம் உள்ளிட்டவை அமெரிக்கா வழங்கியது அல்ல என்றும் செனட் சபைக்கு அமெரிக்க அதிபர் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த இரண்டு திருத்தங்களையும் செனட் சபை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.