பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தற்கொலைத் தாக்குதலின் விளைவாகத்தான் இறந்துள்ளார்; துப்பாக்கி குண்டினால் அல்ல என்று ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகளின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து திரும்பிய ஸ்காட்லாந்து யார்ட் குழுவினர் இன்று தங்களது விசாரணை அறிக்கையை பாகிஸ்தான் இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் ஹமீத் நவாஸிடம் வழங்கினர். அதன் சுருக்கமான நகல் பிரிட்டன் தூதரக அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், "தற்கொலைத் தாக்குதலால் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் தான் பெனாசிர் இறந்தார்" என்று கூறப்பட்டுள்ளதாக பிரிட்டன் தூதரக அதிகாரி மருத்துவர் நாதனியல் கேரி தெரிவித்தார்.
"குண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பு சந்தேகத்திற்குரிய நபர்களில் ஒருவன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதை ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. தாக்குதல் நடந்த போது இந்த நபர் புட்டோவின் வாகனத்திற்கு முன்புறம் மிக அருகில் நின்றுள்ளான்.
அவன் சுட்ட குண்டுகள் பெனாசிரைத் தாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், குண்டு வெடித்தவுடன் பெனாசிர் நிலைதடுமாறி தனது வாகனத்தில் விழுந்தபோது, அவரின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் இறந்துள்ளார்" என்றார் அவர்.
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மாலை ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டுத் தனது காருக்குத் திரும்பிய பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார்.
வாகனத்தின் மேற்திறப்பில் நின்றபடி வந்த பெனாசிரை நோக்கிச் சிலர் சுட்டதாகவும், அதில்தான் பெனாசிர் இறந்ததாகவும் அவரது கட்சியினர் கூறினர். ஆனால், தற்கொலைத் தாக்குதலில் நிலைகுலைந்த பெனாசிர், தனது வாகனத்தின் மேற்திறப்புத் தகட்டில் மோதியதாகவும், அதனால் ஏற்பட்ட படுகாயத்தினால் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
இதையடுத்து எழுந்த குழப்பமான சூழலில், பெனாசிர் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு ஸ்காட்லாந்து யார்ட் புலனாய்வுக் குழுவிற்கு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்தார்.