கியூபாவில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி கடந்த 49 ஆண்டுகளாக அதிபர் பதவியை வகித்து வந்த ஃபிடல் காஸ்ட்ரோ இன்று தனது ஓய்வை அறிவித்தார்.
இதன் மூலம், சில பேரரசர்களைத் தவிர உலகிலேயே நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சி நடத்திய ஆட்சியாளர்களில் ஒருவர் என்ற பெருமையையும் ஃபிடல் காஸ்ட்ரோ பெறுகிறார்.
அமெரிக்க உளவு நிறுவனங்களின் கொலைப் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ள, 81 வயதான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்துக் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தனது பதவியைத் தன் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் வழங்கினார்.
அப்போதிருந்து ரகசிய இடத்தில் ஓய்வுபெற்று வரும் ஃபிடல் காஸ்ட்ரோ இன்று கியூப அரசிதழான கிரான்மாவில் எழுதியுள்ள கடிதத்தில், "எனது மூலாதாரமான அடிப்படைப் பணிகளில் இருந்து நான் விலக விரும்பவில்லை என்றாலும், இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயக் கடமை உள்ளது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ.அதிகாரிகள் சோவியத் கம்யூனிஸ்ட் ஆட்சியை அழிப்பதற்காக ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்வதற்குப் பலமுறை முயன்றும் முடியாமல் போனது. அமெரிக்காவின் 9 அதிபர்களின் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஃபிடல் காஸ்ட்ரோ, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் கடந்த 19 மாதங்களாக பொது இடங்களில் பிரவேசிக்கவில்லை.
பச்சை நிற ராணுவ உடையில் தான் ஆற்றிய நீண்ட அரசியல் உரைகளின் மூலம் வளர்ந்துவரும் நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஃபிடல் காஸ்ட்ரோவைப் பார்த்து அவரின் எதிரிகள் சொல்லிய ஒரே குற்றச்சாற்று, அவர் தன்னை எதிர்ப்பவர்களைச் சிறையில் அடைக்கிறார் என்பது மட்டுமே.
கடந்த டிசம்பர் மாதம் தான் எழுதிய கடிதத்தின் மூலம், அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதைக் குறிப்பால் உணர்த்தியிருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அப்போது கியூபாவின் தேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய அவர், "எனது அடிப்படைக் கடமை என்பது எனது பதவியிலோ, இளையோரை முன்னேத்திலிருந்து தடுப்பதிலோ இல்லை. ஆனால், நான் வாழ்ந்த காலத்தில் நான் சந்தித்த அனுபவங்களையும், அரசியல் சூழ்ச்சிகளுக்கான தீர்வுகளையும் இளையோருக்குக் கற்றுத்தந்து அவர்களை வழிநடத்துவதில் தான் உள்ளது" என்றார்.
முன்னதாக, அண்மையில் நடந்த கியூப நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதிக்க உள்ளனர். பின்னர் மார்ச் மாதம் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு முறைப்படி பதவியேற்றுக் கொள்வார்.