எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட மறைந்த மலையேற்ற வீரர் சர் எட்மண்ட் ஹிலாரிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் அண்மையில் நடந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சார்பில் வர்த்தக அமைச்சர் கமல்நாத்திடம் இருந்து சர் எட்மண்ட் ஹிலாரியின் மனைவி ஜூன் ஹிலாரி விருதைப் பெற்றுக் கொண்டார்.
வெல்லிங்டன்னைச் சேர்ந்த இந்தியத் தூதரக அலுவலகம் சார்பில் ஆக்லேண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு ஆளுநர் சூசன் சத்யானந்த் தலைமை வகித்தார். இந்தியத் தூதர் கடகத் பத்ரோஸ் எர்னெஸ்ட், எட்மண்ட் ஹிலாரியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினைப் பெறும் 13 ஆவது அயல்நாட்டவர் சர் எட்மண்ட் ஹிலாரி ஆவார்.
சர் எட்மண்ட் ஹிலாரியின் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள அன்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுவதாக அமைச்சர் கமல்நாத் கூறினார்.