இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தில், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைசும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன் மூலம் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் 123 உடன்பாட்டு ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்று மாலை (இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணியளவில்) வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பேசிய பிரணாப் முகர்ஜி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் கூட்டு நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாக கூறினார்.
இதன் பின்னர் பேசிய காண்டலீசா ரைஸ், கடந்த பல ஆண்டுகளாக நம்பத்தன்மை இல்லாததால், இரு நாடுகளுக்கிடையே தேவைப்படும் கூட்டு நடவடிக்கை பூர்த்தியாகாமல் இருந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதன் மூலம் அது பூர்த்தியடைந்துள்ளது.
எரிபொருள் பாதுகாப்பு, பருவநிலம் மாற்றம், பயங்கரவாதம், தீவிரவாதம், அணு ஆயுதப் பரவல் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகளுக்கும் இந்த ஒப்பந்தம் தீர்வு காணும் விதமாக அமையும் என்றும் தாம் நம்புவதாகவும் காண்டலீசா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.