மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கிருஷ்ணசாமி, அவரது கட்சி அலுவலகத்தில் மர்ம மனிதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் தங்களுக்குச் சமஉரிமை கேட்டு நடத்திவரும் போராட்டங்களை மலேசிய அரசு அடக்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நடந்த பேரணியில் கூட கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மலேசியக் காவல் துறையினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில், நடந்துள்ள இக்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணசாமி, ஜோகார் பஹ்ரு பகுதியில் உள்ள அவரின் அலுவலகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததாகவும், 5 அடி உயரமுள்ள மர்ம மனிதனைக் காவல் துறையினர் தேடி வருவதாகவும் அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இந்த கொலைக்குக் காரணம் அரசியலா? அல்லது தனிப்பட்ட விரோதமா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே கட்சியை சேர்ந்த ஜோ.பெர்னாண்டஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இன்னும் துப்புதுலங்காத நிலையில் இப்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மலேசியன் இந்தியன் காங்கிரஸ், ஆளும் கூட்டணியில் உள்ள மூன்றாவது பெரிய கட்சியாகும். தற்போது 61 வயதாகும் கிருஷ்ணசாமி தமிழர்களுக்குத் தீவிரமாக ஆதரவளிக்கக் கூடியவர் என்று கூறப்படுகிறது.