அதிபர் பதவிக்கு கருப்பினத்தவர் தேர்வு செய்யப்படுவதை அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அமெரிக்கவாழ் ஆஃப்ரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மாகாண வாரியாக நடந்து வருகிறது.
இதில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கருப்பினத்தவரான பாரக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவரில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சார்பில் தொலைபேசி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 56 விழுக்காட்டினர் ஹிலாரிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். குறிப்பாக, கருப்பினத்தவர், அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் என எந்த வகையாகப் பிரித்தாலும் அவர்கள், அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் வரவேண்டும் என்றே விரும்புகின்றனர்.
பாரக் ஒபாமாவிற்கு 47 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளனர். இதில் பெரும்பாலான அமெரிக்கவாழ் ஆஃப்ரிக்கர்கள், அதிபர் பதவிக்கு கருப்பினத்தவர் தேர்வு செய்யப்படுவதை அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.