இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வகைசெய்யும் 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை சட்டமாக்கிடும் வரைவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்) மதியம் 2.30 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.20) அணு சக்தி ஒப்பந்த சட்டத்தில் கையெழுத்திட பின்னர் பேசிய அதிபர் புஷ், அணு எரிபொருள் வழங்குவது தொடர்பாக 123 உடன்பாட்டில் ஏற்கனவே அமெரிக்கா தெரிவித்த நடைமுறைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
இந்தியா தனது அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்யும் விஷயத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கும் என்றும் புஷ் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மார்க், வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் (இந்திய நேரப்படி சனி நள்ளிரவு 1.30) காண்டலீசா ரைசும், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் 123 உடன்படிக்கையில் கையெழுத்திடுவர் என்று கூறினார்.