இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக அணு சக்தி தொழில்நுட்ப வணிக நாடுகளிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் விலக்கை (Waiver) அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) அளித்துள்ளது.
அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக கடைபிடித்துவரும் சுய கட்டுப்பாட்டை (Unilateral Moratorium) உறுதியாக கடைபிடிப்போம் என்றும், அணு ஆயுத பரவல் தடுப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் இந்தியா அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என்.எஸ்.ஜி. தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத நாடான இந்தியாவிற்கு, அணு சக்தித் தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட என்.எஸ்.ஜி. (Nuclear Suppliers Group - NSG) ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திடாத ஒரு நாட்டுடன் வணிகம் செய்ய என்.எஸ்.ஜி. முன்வந்து அனுமதி அளித்திருப்பது இதுவே முதன்முறையாகும். ஆனால், இன்று நடந்த இறுதிக் கூட்டத்தில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
1974ஆம் இந்தியா முதன் முதலில் அணு ஆயுத சோதனை நடத்தியதும் சர்வதேச அளவில் அணு சக்தி தொழில்நுட்பத்தை பெறுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன. அந்த தடை 1998ஆம் ஆண்டு இந்தியா இரண்டாவது முறையாக அணு சோதனை நடத்தியபோது மேலும் கடுமையானது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது என்.எஸ்.ஜி. அளித்துள்ள விலக்கினால் அணு தொழில்நுட்ப நாடுகளுடன் மீண்டும் வணிகம் செய்யும் - யுரேனியம் எரிபொருள் பெறவும், நமது தொழில்நுட்பத்தை விற்கவும் - அனுமதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.