இலங்கை ராணுவம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்வது பற்றிய முக்கிய தகவலை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து தியாகராஜ மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய பாதுகாவலரும் தாக்குதலில் பலியானார். இந்த சம்பவத்தால் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியாகராஜ மகேஸ்வரன். கொழும்பில் வசித்துவரும் இவர், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள சிவன் (பொன்னம்பல வாணேஸ்வரர்) கோயிலுக்கு குடும்பத்தினருடன் நேற்று காலை சென்றார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோயிலின் உள் வீதியில் மகேஸ்வரன் வந்து கொண்டு இருந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மகேஸ்வரனை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் மகேஸ்வரன், அவருடைய இரு மெய்க்காவலர்கள், பக்தர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரனும், அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவரும் இறந்தனர்.
இதற்கிடையில், மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறையின் அறிவித்துள்ளனர். மகேஸ்வரனின் மெய்க்காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அந்த மர்ம நபரும் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
கொலைக்குக் காரணம்!
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசின் முப்படையினரும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர்கள் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கு மகேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார். சிறிலங்க எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே தமிழ் எம்.பி.யான இவர், ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஆட்சியில் இந்து கலாசாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
40 வயதான மகேஸ்வரன், கடந்த 2001-ஆம் ஆண்டு முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கடந்த 2005-ஆம் ஆண்டு கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில், துப்பாக்கியால் சுடப்பட்ட அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் தகவல்!
இலங்கை ராணுவம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்வது பற்றிய முக்கிய தகவலை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதாக, விடுதலைப்புலிகளின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
மகேஸ்வரன் கொல்லப்பட்டதை அடுத்து கொழும்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற காரணத்தினால் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.