நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு சொந்தமான 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். அதன் பின்னர், சூர்யா நடித்த படங்கள் மட்டுமின்றி, கார்த்தி நடித்த சில படங்களையும், 'உறியடி' உட்பட வெளி நடிகர்கள் நடித்த சில படங்களையும் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து ஆண்டுகளாக சுறுசுறுப்பாக இயங்கி வந்த இந்த நிறுவனம், கடைசியாக 'ரெட்ரோ' என்ற திரைப்படத்தை தயாரித்தது. இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்நிறுவனம் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவத்தின் மூலம், இனிமேல் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதிய படங்களை தயாரிக்க வாய்ப்பில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.