அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுவது ஆடி மாதம். இந்த ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை மனமுருக வேண்டி வரும் பக்தர்களுக்கும் அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவ்வாறான ஆடி மாதத்தில் பெண்கள் அவசியமாக விரதமிருந்து வழிப்பட வேண்டிய நாளாக கருதப்படுவது ஆடிப்பூரம் நன்னாள்.
ஆடிப்பூரம் ஏன் கொண்டாடப்படுகிறது?
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நன்னாளாம் ஆடிப்பூரமானது மகாலட்சுமியின் லட்சணம், ஆண்டாள் அவதரித்த திருநாளாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டால் தேவியை வணங்கி சிறப்பிக்கும் இந்நாள் அம்மனுக்கும் சிறப்பு வாய்ந்தது.
பங்குனி உத்திரத்திலே பரமேஸ்வரரை மணந்த பார்வதி தேவியாருக்கு ஆடிப்பூரத்திலே வளைகாப்பு கொண்டாடப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். இந்நாளிலே 108 அம்மன் ரூபங்கள் கொண்ட பார்வதி அம்மனே பூமிக்கு வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி ஆடிப்பூரம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம் திருவிழாக்கள்:
ஆடிப்பூரம் நாளிலே அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து, பூக்கள், விளக்குகள், பழங்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலிக்கிறார் அம்மன். ஆடிப்பூர நாளிலே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம் விரதம் மற்றும் வழிபாடு முறைகள்:
அம்மனுக்கு உகந்த மாதமாம் ஆடியிலே வரும் ஆடிப்பூரம் அன்று காலையே வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை சொல்லி வருதல் சிறப்பு மிக்கது. அம்மன் கோவில்களில் நிகழும் வளைகாப்பு விழாவிற்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
அம்மனுக்கு சார்த்தப்பட்ட கண்ணாடி வளையல்களை பிரசாதமாக பெற்று பெண்கள் அணிந்துக் கொள்வது நல்லது. அம்மன் வளையல்களை அணியும் இளம்பெண்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
Edit by Prasanth.K