தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் தனது முதல்வர் பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்குத்தேவையான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய இந்த மனுவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ஆய்வு செய்து, இன்று கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் நேரில் வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "நான் மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். அந்த மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்குவார்" என்று குறிப்பிட்டிருந்தார்.