பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் அப்போதைய பிளாக்பஸ்டர் ஹிட்டான சகலகலா வல்லவன் படத்தின் வசூலையே முறியடித்ததாக சொல்லப்படுவதுண்டு.
இந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.
இந்நிலையில் இந்த படத்தின் டைடில் கார்டில் இடம்பெறும் வெளக்கு வச்ச நேரத்துல பாடலுக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யமானக் கதையை பாக்யராஜ் தற்போது ஒரு நேர்காணலில் வெளியிட்டுள்ளார். அதில் “முதலில் அந்த பாடலில் பல்லவி அருவிக் கர ஓரத்தில நீராடினோம் என்றுதான் இருந்தது. ஆனால் எனக்கு அந்த வரிகள் பிடிக்கவில்லை. பாடர் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்த போது எனக்குத் திடீரென வரிகள் தோன்றின.
உடனே பேப்பரில் “வெளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்.” என்ற பல்லவி தோன்றியது. அதை இளையராஜாவிடம் கொடுத்தேன். அவர் வரிகளைப் பார்த்துவிட்டு “மால போட்ட நேரத்துல ஏன் இத மாதிரி வரிகளை எல்லாம் பாட சொல்றீங்க?” என்றார். ஆனால் எனக்கு இந்த வரிகள் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. அவரைப் பாட வைத்தேன். இறுதியில் அவர்களை வரிகளை மறந்துவிட்டு தந்தானனா” என பாடிவிட்டார். அது கூட இன்னும் சிறப்பாக இருக்கும் என அதையே வைத்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.