அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்களை சுட்டு காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஆப்கன் நாட்டவர் என்று FBI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஃபாரகட் மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
மெட்ரோபொலிட்டன் காவல்துறை, இந்த தாக்குதல் திடீரெனவும், வேண்டுமென்றே காவல்படையினரை குறிவைத்தும் நடத்தப்பட்டது போல் தெரிகிறது என்று கூறியது. சந்தேக நபரான 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்பவர், 2021-ல் 'ஆபரேஷன் அல்லிஸ் வெல்கம்' திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்.
துப்பாக்கி சண்டையின் போது இவரும் சுடப்பட்டு மருத்துவமனையில் பலத்த காவலுடன் உள்ளார். FBI இந்த சம்பவத்தை ஆரம்பத்தில் ஒரு பயங்கரவாத செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது. மேற்கு வர்ஜீனியா ஆளுநர் முதலில் வீரர்கள் இறந்ததாக தெரிவித்து, பின்னர் தகவல்களை வாபஸ் பெற்றார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.