அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்தார். நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த அவர், மாலை விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இன்று காலை 9.10 மணியளவில் விஜய் பனையூர் அலுவலகம் வந்தடைந்தார்.
காலை 9.30 மணியளவில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்டோருடன் பனையூர் அலுவலகம் வந்தடைந்தார். அவரை த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வரவேற்றார்.
செங்கோட்டையன் வருகையின்போது பனையூர் அலுவலகத்தில் சிறு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு பாதுகாவலர் அநாகரிகமாக பேசியதால், செய்தியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் வெளியே வந்து மன்னிப்பு கேட்டு செய்தியாளர்களை சமாதானப்படுத்தினர்.