கர்நாடக காங்கிரஸில் முதலமைச்சர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவரின் பதவியை தக்கவைக்கத் தயாராகி வருகின்றனர். இந்த பதவிக் குழப்பத்துக்கு கட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சித்தராமையா வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார்.
துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் அறிகுறி தெரிந்தாலும், சித்தராமையாவின் ஆதரவாளர்கள் டெல்லிக்கு சென்று கட்சி தலைமையை கடுமையாக வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை, தலைமை மாற்றம் அவசியம் என்றால், ஜி. பரமேஸ்வரா போன்ற மாற்றுத் தலைவர்களின் பட்டியலை அவர்கள் முன்வைக்கவுள்ளனர்.
"சோனியா, ராகுல், நானும் சேர்ந்து இதைச் சரி செய்வோம்" என்று கார்கே உறுதியளித்துள்ளார். டி.கே.எஸ். தலைமைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மறைமுகமாக கூறி, சித்தராமையாவுக்கு நினைவூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சித்தராமையா பதவி விலகுவது குறித்த ரகசிய ஒப்பந்தம் இருந்ததாக கூறப்படுவதுதான் இந்த மோதலின் மையமாக உள்ளது.