நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "வா வாத்தியார்" திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸின் சொத்துக்களை நிர்வகிக்கும் சொத்தாட்சியர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன்லாலிடம் இருந்து பெற்ற ரூ. 10.35 கோடி கடன், வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ. 21.78 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த கடன் தொகையை செலுத்த உத்தரவிட கோரியும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, 'வா வாத்தியாரே' திரைப்படத்தை டிசம்பர் 5-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 8-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.