நடிகர் கார்த்தி நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'வா வாத்தியாரே வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' போன்ற வித்தியாசமான மற்றும் வெற்றிகரமான படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி ஜோடியாக நடிகை க்ருத்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், அனுபவமிக்க நடிகர் சத்யராஜ் வில்லன் பாத்திரத்திலும், ராஜ்கிரண் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மேலும் ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலரும் இதில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு பல ஹிட் பாடல்களைக் கொடுத்த சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் ஒரு கலகலப்பான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.