அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபத்தை மலை உச்சியில் ஏற்றாமல் வேறு இடத்தில் ஏற்ற இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்ததை மனுதாரர் ராம. ரவிக்குமார் எதிர்த்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மலையை நேரடியாக ஆய்வு செய்தார். இறுதியில், இந்த ஆண்டு முதல் மலை உச்சியில் உள்ள தூணிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், இதற்கு போதுமான பாதுகாப்பை தமிழக காவல் துறையினர் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாத நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒரு கூடுதல் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் மனுதாரர் 10 நபர்களுடன் சென்று தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார்.