தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை தன்னை இணைத்துக் கொண்டதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பயணித்து வருபவர் செங்கோட்டையன். 50 வருட காலமாக எந்த கட்சிக்கும் போகாமல் அதிமுகவிலேயே இருந்திருக்கிறார். மேலும் 9 முறை எம்.எல்.ஏ அமைச்சர் பதவி என கட்சியில் கெத்தாக வலம் வந்தவர்.
கொங்கு மண்டலம் என சொல்லப்படும் பவானி, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இவருக்கு பலம் அதிகம். ஆதரவாளர்களும் அதிகம். எனவே அந்த தொகுதிகளில் வாக்குகளை பெற அதிமுக இவரை பயன்படுத்தி வந்தது. ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியவரை ஒன்றிணைத்து அதிமுகவை பலமாக்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி.
ஒருபக்கம் பாஜகவும் தன்னை கைவிட்டு விட கோபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் அவருக்கு பலமோ இல்லையோ கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு பலம்தான். ஏனெனில் செங்கோட்டையன் போன்ற 50 வருட அரசியல் அனுபவமுள்ள ஒருவரை கண்டிப்பாக விஜய் பயன்படுத்திக் கொள்வார். கொங்கமண்டலத்தில் தவெகவின் இமேஜும் உயர வாய்ப்பிருக்கிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயை தவிர வேற தெரிந்த முகம் யாருமில்லை என்கிற இமேஜும் மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சரி..தவெகவில் இணைந்ததால் செங்கோட்டையனுக்கு என்ன லாபம் என பார்த்தால் இனிமேல் அதிமுகவில் இணைய முடியாது. கதவுகளை சாத்திவிட்டார் பழனிச்சாமி. திமுக பக்கம் போனால் கடுமையான விமர்சனங்கள் வரும். புதிய கட்சி தொடங்கினாலும் அதில் பெரிதாக சாதிக்க முடியாது. எனவே விஜய் மூலம் பிரபலமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வது நல்லது என முடிவெடுத்திருக்கிறார். அது அவருக்கு பலம்தான். அதேநேரம் பலவீனம் என்னவென பார்த்தால் தவெகவில் இருப்பவர்கள் எல்லாம் புதியவர்கள்.. இளைஞர்கள்.. செங்கோட்டையனின் அரசியல் அனுபவத்தில் 20 சதவீதம் கூட இல்லாதவர்கள். அவர்களோடு செங்கோட்டையன் எப்படி பயணிப்பார் என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்!...