Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

Advertiesment
செங்கோட்டையன்

Mahendran

, வியாழன், 27 நவம்பர் 2025 (17:36 IST)
செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
"தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
 
மேலும், செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து விஜய் விரிவாக அறிவித்தார். "அண்ணன் செங்கோட்டையன், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக, "ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்துடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்," என்றும் விஜய் தெரிவித்தார். மேற்கு மண்டல அரசியலில் செங்கோட்டையனின் செல்வாக்கைப் பயன்படுத்தும் நோக்கில் இந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 
செங்கோட்டையனுடன் தவெகவில் இணைந்த மற்ற உறுப்பினர்களையும் விஜய் வரவேற்றார். "அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களுக்கு ஒன்னும் செய்யல.. ஆனா தலைவர் ஆகணுமா?!.. விஜயை சீண்டும் சாலமன் பாப்பையா!...