Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

Advertiesment
anbumani

Siva

, வியாழன், 27 நவம்பர் 2025 (17:56 IST)
தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில்,  வீண் பெருமை பேசுவதை விடுத்து சட்டம் - ஒழுங்கை காப்பதில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற  காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும்,  ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன்  திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால்,  ஆத்திரமடைந்த  அஜித்குமார்  இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம்  உறுதியாகியிருக்கிறது.
 
இதே தஞ்சாவூர் மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை.
 
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன.  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
 
ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை.  தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்  அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது  தமிழ்நாட்டில்  சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!