அதிமுகவில் அரை நூற்றாண்டு பயணித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் திடீர் திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சியில் பல வருடங்களாக இருக்கும் ஒரு அரசியல்வாதி அந்த கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியடைந்து வேறு கட்சியில் இணைவது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் என்றாலும் செங்கோடையன் திமுகவுக்கு செல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றிருக்கிறார் செங்கோட்டையன்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஏற்கனவே அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் என எல்லோரையும் அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் முயற்சி செய்தார். இந்த அசைன்மென்ட்டை அவருக்கு பாஜக கொடுத்ததாக தெரிகிறது. இதை அவரே வெளிப்படையாக செய்தியாளரிடமும் சொன்னார்.
ஆனால் அது நடக்காது என தெரிந்ததும் பாஜகவை அவரை கழட்டி விட்டுவிட்டது. பாஜக தனக்கு உறுதுணையாக நிற்கும் என கணக்கு போட்ட செங்கோட்டையனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்த அவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவை விட்டு செங்கோட்டையன் செல்வது எந்த அளவுக்கு அந்த கட்சியை பாதிக்கும் என பார்த்தால் கொங்கு மாவட்டத்தில் குறிப்பாக கோபிசெட்டிபாளையம் தொகுதியை பல வருடங்களாக செங்கோடையன் கையில் வைத்திருப்பதால் அந்த தொகுதியில் அதிமுக வாக்குகளை இழக்கும் என்கிறார்கள்.
மேலும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் சில தலைவர்களும் அதிமுகவில் இருந்து வெளியேறி செங்கோட்டையன் மூலம் தவெகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். அநேகமாக அந்த வேலையை செங்கோட்டையன் ஏற்கனவே துவங்கியிருப்பார். இதுவும் அதிமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.
ஒருபக்கம் செங்கோடையன் தவெகவுக்கு அந்தக் கட்சிக்கு என்ன லாபம் என பார்த்தால் எம்ஜிஆருடன் அரசியல்களத்தில் பயணித்தவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்தவர். அரசியலில் 50 வருட கால அனுபவம் பெற்ற ஒரு மூத்த அரசியல்வாதி கட்சியில் இருப்பது தவெகவுக்கு கண்டிப்பாக பலம்தான். ஏனெனில் அவரின் அனுபவம் கட்சியை வலுசேர்க்கும்.
அதேபோல் கொங்கு மாவட்டத்தில் தவெகவின் இமேஜும் உயரும். நம்மவர் ஒருவரை இந்த கட்சியில் இருக்கிறார் என கருதி செங்கோட்டையனின் ஆதரவு ஓட்டுக்கள் தவெகவிற்கு கிடைக்கும் என்கிறார்கள். ஏற்கனவே இளைஞர்கள் ஓட்டுக்கு விஜய்க்கு கிடைக்கும் நிலையில் கணிசமான ஓட்டுக்களை செங்கோட்டையனும் கொண்டு வருவார் என்கிறார்கள்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயைத் தவிர தெரிந்த முகம் யாரும் இல்லை.. அனுபவிக்க தலைவர் இல்லை என்ற விமர்சனம் அந்த கட்சியின் மீது இருக்கிறது. செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதி கட்சிக்குள் வரும்போது அந்த இமேஜும் மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே கண்டிப்பாக விஜய் இதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.