பெங்களூருவில் உள்ள சர் எம். விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த சக பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் அவருக்கு உதவிக்கு விரைந்தனர்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது, அதற்குள் பிளாட்ஃபாரத்திலேயே அந்த பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. RPF பெண் காவலர் அம்ருதா என்பவர், பிரசவத்திற்கு உதவியாக இருந்து, குழந்தை பாதுகாப்பாக பிறக்க உதவி செய்தார்.
பின்னர், தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை தென்மேற்கு ரயில்வேயின் கோட்ட மேலாளர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய பெண் காவலர் அம்ருதா உட்பட, இந்த இக்கட்டான சூழலில் துரிதமாக செயல்பட்டு உயிர் காக்க உதவிய அனைவருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.