தெலுங்கானா மாநிலத்தில், ஏற்கனவே திருமணமான 40 வயது நபர் ஒருவர், எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், திருமணம் செய்த நபர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கானாவில் 40 வயதுடைய நபர் ஒருவருக்கும் 13 வயது சிறுமி ஒருவருக்கும் சட்டவிரோதமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, தெலுங்கானா காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சட்டவிரோத திருமணத்தில் ஈடுபட்டதாக, திருமணம் செய்த 40 வயது நபர், அவரது மனைவி, திருமணத்தை செய்து வைத்த பூசாரி, மற்றும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த தரகர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குழந்தை திருமணங்களுக்கு எதிராகச் சட்டங்கள் இருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.