உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிவம் என்ற இளைஞர், தனது கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களாக சடலத்துடன் அதே வீட்டில் வசித்தது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிவம், சுமனா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் குடியேறிய இந்தத் தம்பதிகள், அங்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், சுமனா கர்ப்பமாக இருந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சனை காரணமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவம், தனது மனைவி சுமனாவை அடித்ததாக தெரிகிறது. சுதாரிப்பதற்குள் சுமனா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். ஆனால், சிவம் தனது மனைவி மயக்கம் அடைந்ததைக்கூட கண்டுகொள்ளாமல், அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து தூங்க சென்றுவிட்டார்.
மறுநாள் காலை எழுந்து, வழக்கம் போல் அவரே உணவு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இரவு மது அருந்திவிட்டு வீடு திரும்பிய சிவம், சுமனா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து, படுத்து தூங்கிவிட்டார்.
இந்த நிலையில், சுமனா இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் அடிப்பதை கண்டுபிடித்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது, சுமனா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று காவல்துறையினர் மதிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த வீட்டில் அங்கங்கே மது பாட்டில்களும், உணவு பண்டங்களும் சிதறிக் கிடந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு சிவம் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, இரண்டு நாட்கள் சடலத்துடன் கணவன் வசித்த இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.