கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது ஃபசீலா என்ற கர்ப்பிணி பெண், தனது பெற்றோருக்கு "நான் சாகப் போகிறேன், இல்லையென்றால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்" என்று வாட்ஸ்அப் மூலம் கடைசி செய்தியை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஃபசீலாவின் மரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வரதட்சணை கொடுமையே அவரது தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. வரதட்சணை கேட்டு ஃபசீலாவின் கணவர் நௌஃபல் மற்றும் மாமியார் ரம்லா ஆகியோர் அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த துன்புறுத்தல்களின் உச்சக்கட்டமாகவே, ஃபசீலா மேற்கண்ட செய்தியை தனது பெற்றோருக்கு அனுப்பிவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஃபசீலாவின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. .