தெலங்கானா மாநிலம் அல்லிகுடெம் கிராமத்தில், கனமழை காரணமாக ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் தற்காலிக சாலை மூழ்கியதால், பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களால் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லிகுடெம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிராமத்திற்கும் மெயின் சாலைக்கும் இடையேயான தற்காலிக சாலை, அருகிலுள்ள ஓடையில் பெருக்கெடுத்த தண்ணீரால் முழுவதுமாக மூழ்கியது. இதனால் மருத்துவமனைக்கு செல்ல வேறு வழியில்லாமல் குடும்பத்தினர் தவித்தனர்.
இந்த நிலையில், வேறு வழியின்றி, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களின் உதவியோடு, இடுப்பளவு உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடிய நீரோடை வழியாகவே கர்ப்பிணி பெண்ணைச் சுமந்து சென்றனர். மிகுந்த சிரமப்பட்டு நீரோடையை கடந்து சாலைக்கு வந்த பிறகு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சரியான நேரத்தில் அவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை தடுத்து நிறுத்தியுள்ளது.
அல்லிகுடெம் கிராம மக்கள் பல ஆண்டுகளாகவே, இந்த தற்காலிக சாலைக்கு பதிலாக, ஓடைக்கு குறுக்கே நிரந்தரமாக ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கை இதுவரை அரசால் கவனிக்கப்படாமல் உள்ளது.