வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி வங்கதேசம் விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்களின் வன்முறை போராட்டம் தீவிரமடைந்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
மாணவர் போராட்ட வன்முறையின்போது கடுமையான முறைகள் பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை தொடா்ந்து, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் அதிகாரபூர்வமாகக் கோரியுள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், இந்த கோரிக்கை இந்தியாவின் நீதித் துறை மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளின்படி ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார். வங்கதேசம் இந்த கோரிக்கைக்கு இந்தியா நிச்சயம் பதிலளிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது.