இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேச மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. கொல்கத்தா மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தன.
வங்கதேசத்தின் அரசியல் சூழல் காரணமாகவே இந்த தொடர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ தரப்பில், இந்த தொடர்களை டிசம்பரில் வேறு தேதியில் நடத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிசிசிஐ-யிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும், புதிய அட்டவணைக்காக காத்திருப்பதாகவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.