வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்தி வர, முகமது யூனுஸின் இடைக்கால நிர்வாகம் இன்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' உதவியை நாட தயாராகிறது.
கடந்த 2024 ஜூலை-ஆகஸ்ட் போராட்டங்களின்போது 'மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக', டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தலைமறைவாக உள்ள இவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. ஹசீனா பதவி விலகிய பின் இந்தியாவுக்கு தப்பி சென்று புது டெல்லியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவருக்கு பிடிவாரண்டின் அடிப்படையில் அல்லாமல், தண்டனை வாரண்டின் அடிப்படையில் ரெட் நோட்டீஸ் கோரப்படும் என்று வழக்கறிஞர் காஸி எம்.எச். தமிம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் முறைப்படி இந்தியாவுக்கு கடிதம் எழுதவுள்ள நிலையில், இது சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிக்கலான விவகாரமாக உள்ளது. இந்தியா-வங்கதேச நாடுகடத்தல் ஒப்பந்தம் இருந்தாலும், "அரசியல் தன்மை கொண்ட" வழக்குகளை நிராகரிக்க இந்தியாவுக்கு சட்டத்தில் இடமுண்டு. இத்தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் பதில், ஹசீனாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.