தோஹாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில், ஜிதேஷ் சர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி நாளை அரையிறுதி போட்டியில் வங்கதேச 'ஏ' அணியுடன் மோதுகிறது.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 201 ரன்களுடன் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 144 ரன்கள் விளாசியிருந்தார். எனினும், கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் நமன் தீர் போன்ற முக்கிய ஐ.பி.எல். வீரர்களின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கிறது.
இந்தியா 'ஏ' அணி லீக் போட்டியில் பாகிஸ்தான் 'ஏ' அணியிடம் தோல்வியடைந்தது. வங்கதேசம் 'ஏ' அணி, வலுவான ஆப்கானிஸ்தானை 78 ரன்களுக்குச் சுருட்டியதால், அவர்களை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்தியாவின் பந்துவீச்சில் தமிழக வீரர் குஜ்ஜப்னீத் சிங் 5 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார்.
மறுபுறம், இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் 'ஏ' அணி இலங்கையுடன் மோதுகிறது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் மாஸ் சதாக்கத் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். இந்தியா 'ஏ' மற்றும் பாகிஸ்தான் 'ஏ' ஆகிய இரு அணிகளும் வென்றால், நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மீண்டும் மோதும் வாய்ப்பு உள்ளது.