பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், உயர் பாதுகாப்பை புறக்கணித்து, பயங்கரவாத குற்றவாளிகள் உட்பட பல கைதிகள் விஐபி வசதிகளை அனுபவிப்பதாக அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சிறை நிர்வாகத்தின் மீது இது தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஜுஹாத் ஹமீத் சகீல் மன்னா என்பவர் சிறை அறைக்குள் மொபைல் போனில் பேசுவது போன்ற காட்சி வெளியானது.
அதேபோல் பல கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்ட உமேஷ் ரெட்டி என்பவர் அறைக்குள் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
இந்த சிறையில் இதுபோன்ற முறைகேடுகள் புதிதல்ல. முன்னதாக, ரவுடி ஸ்ரீனிவாஸ் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியதும், நடிகர் தர்ஷன் சிறைக்குள் சிகரெட் மற்றும் காஃபி போன்ற சிறப்பு உபசரிப்புகளைப் பெற்றதும் சர்ச்சையானது.
உயர் பாதுகாப்பு கொண்ட சிறைக்குள் சட்டவிரோத பொருட்கள் கிடைப்பது குறித்து புகார் எழுந்த நிலையில், சிறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.