பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தது.
நாள் முழுவதும் நிலையற்ற வர்த்தகம் காணப்பட்டாலும், அரசியல் ஸ்திரத்தன்மை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை காரணமாக இறுதி நேரத்தில் குறியீடுகள் உயர்ந்தன.
சென்செக்ஸ் குறியீடு 84.11 புள்ளிகள் உயர்ந்து 84,562.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 50 குறியீடு 30.90 புள்ளிகள் அதிகரித்து 25,910.05 புள்ளிகளாகவும் நிலைபெற்றன. நிஃப்டி தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்துடன் முடிவடைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் முதலீட்டாளர்களின் உணர்வை உயர்த்திய போதிலும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக பங்குகளை விற்றனர். எனினும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,091.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியது சந்தைக்கு ஆதரவளித்தது.
அடுத்து வரவிருக்கும் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் கமிட்டியின் முடிவுகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.