அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு ஒரு மாத காலமே போதுமானது என்று தெரிவித்துள்ளார். இந்த வேலையை நிறுத்த வேண்டும் என்று திமுக பல்வேறு காரணங்களை சொல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி "முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்த கலை" என்று சாடினார். ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் அதிமுக நீதிமன்றம் சென்றதால் 31 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து தொகுதிகளிலும் சுமார் 60 லட்சம் வாக்குகள் கூட முறைகேடாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.
மேலும், திமுக இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சியினரே பிஎல்ஓ-க்களுடன் சென்று வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் ஊழல் நடக்கவிருப்பதாகவும், இது குறித்து அதிமுக சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.