பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதன் தோல்விக்கு அதன் 'அகங்காரமே' காரணம் என்று அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் மூத்த தலைவர் வாரிஸ் பதான், "ஆரம்பத்தில் ஆறு இடங்களை மட்டுமே கேட்டு கூட்டணியில் இணைய முன்வந்தபோதும், ஆர்.ஜே.டி. மறுத்துவிட்டது. இந்த அகங்காரமே அவர்களுக்கு தோல்வியை கொண்டு வந்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். சீமாஞ்சல் பகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று ஏஐஎம்ஐஎம் ஆறு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மேலும், 19% வாக்காளர்களை கொண்ட சிறுபான்மை சமூகத்தைப் புறக்கணித்து, 2% வாக்காளர்களை கொண்ட சமூகத்தை சேர்ந்தவரை துணை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் மகா கூட்டணியின் முக்கியத் தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓவைசியை 'தீவிரவாதி' என்று தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்த பதான், அவர் அனைத்து முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இத்தேர்தலில் மகா கூட்டணி வெறும் 34 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.