பிகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ஒருவர் மொகாமா தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தள வேட்பாளருமான அனந்த் குமார் சிங் இந்த வெற்றியை பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வீணா தேவியை விட 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அனந்த் குமார் சிங், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, நவம்பர் 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
பிகாரில் பிரபல தாதாவாக அறியப்படும் அனந்த் சிங், முன்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து பின்னர் ஜேடியு-வில் இணைந்தவர். இவரது மனைவி நீலம் தேவி இதற்கு முன் மொகாமா எம்.எல்.ஏ.வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில தேர்தல் நிலவரங்களை பொறுத்தவரை, மாலை 4 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை உறுதி செய்துள்ளது.