சுமார் 43 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க அரசின் முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார். இதன்மூலம் அனைத்து துறைகளும் மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற, ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுமார் ஒன்றரை மாத காலமாக அரசு முடங்கியிருந்தது. இதனால், விமான போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கட்சியின் நிலைப்பாட்டை மீறி, சில ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்கள் சமரசம் செய்துகொள்ள முன்வந்ததால், செனட் அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவில் கையெழுத்திட்ட டிரம்ப், "சட்டவிரோத குடியேற்றத்துக்காக கோடிக்கணக்கான டாலர்களை பறிக்க முயன்ற ஜனநாயக கட்சியினருக்கு மிரட்டி பணம் பறிப்பதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சொல்லிவிட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.