வெளிநாட்டு மாணவர்களின் விசா காலத்தை வரம்புக்கு உட்படுத்துவது, வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் விசாக்களையும் கட்டுப்படுத்துவது போன்ற புதிய விசா விதிகளை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
தற்போது, அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் கல்வி அல்லது பணியின் காலம் முடியும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் டிரம்பின் புதிய முன்மொழிவு, இந்த நடைமுறையை மாற்றி, விசாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்கும். இதன்படி, F விசாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கும், J விசாவில் உள்ள கலாச்சார பரிமாற்ற பணியாளர்களுக்கும், I விசாவில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் கால வரம்பு விதிக்கப்படும்.
மாணவர் மற்றும் பரிமாற்ற விசாக்கள் நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கான விசா காலம் 240 நாட்கள் என நிர்ணயிக்கப்படும். சீன பத்திரிகையாளர்களுக்கு இது வெறும் 90 நாட்கள் மட்டுமே. இருப்பினும், இந்த காலக்கெடுவை நீட்டிக்க விண்ணப்பிக்கலாம்.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குடியேற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.