அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி 4 முறை நிராகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களில் டிரம்ப் நான்கு முறை மோடியை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் மோடி தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் ஜெர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தின் உச்சகட்டத்தை உணர்த்துகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டது.
இது ஆகஸ்ட் 27 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கையின் மீது பிரதமர் மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். ஆனால், இந்த வாதத்தை இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த சூழலில், மோடியின் அழைப்பு நிராகரிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலை காட்டுகிறது