ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்வதை கண்டிக்கும் வகையில், அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்து அதிகாரபூர்வமான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரி, ஆகஸ்ட் 27, நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வரி விதிப்பானது, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவு 14329-ஐ செயல்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு, அறிவிப்பின் பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு வகையான இந்திய பொருட்களுக்குப் பொருந்தும். இந்த காலக்கெடுவுக்கு பிறகு அமெரிக்காவிற்கு வரும் அல்லது கிடங்குகளில் இருந்து வெளியே எடுக்கப்படும் எந்த பொருளுக்கும் இந்த வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.